மதுரகவியாழ்வார் வரலாறு

மதுரகவியாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் 5வது ஆழ்வார் ஆவர்.இவர் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள திருக்கோளூர் என்னும் திவ்ய தேசத்தில் அவதரித்தார்.

  • மாதம் – சித்திரை
  • நட்சத்திரம் – சித்திரை
  • திவ்விய ப்ரபந்தம் – கண்ணிநுண்சிறுத்தாம்பு என்று தொடங்கும் பதினோரு பாசுரங்கள்.
மதுரகவி ஆழ்வார்
மதுரகவி ஆழ்வார்

மதுரகவியாழ்வார் திருமாலின் வாகனமான கருடனின் அம்சமாக அவதரித்தார். இவரது காலம் 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.

இவர் வேத சாத்திரங்களை நன்குக் கற்றவர். இவர் வடநாட்டு யாத்திரை மேற்கொண்டு இருந்தார். ஒருநாள் இரவு அயோத்தியில் பேரொளியைக் கண்டு வியப்படைந்தார்.அவ்வொளியை மறுநாளும் அவர் கண்டார். அவ்வொளி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்காக தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார். பூரி, அஹோபிலம், திருவேங்கடம் ஆகிய தேசங்களை தாண்டியும் அவ்வொளித் தெரிந்தது. மீண்டும் தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார்.கடைசியாக அந்த ஒளி, திருக்குருகூரில் மறைந்தது. ஆழ்வாரும் அவ்வூர் மக்களிடம், இவ்வூரில் ஏதேனும் அதிசயம் உள்ளதா என்று வினவ, அவ்வூர் மக்களும் இங்கு நம்மாழ்வார், ஒரு புளிய மரத்தடியில், யோக நிலையில் இருப்பதாகக் கூறினார்.

மதுரகவியாழ்வார் நம்மாழ்வர்க்கு உயிர் இருக்கிறதா என்று சோதிக்க அவர் மேல் ஓர் கல்லை எறிந்தார்.நம்மாழ்வார் முதன்முறையாக கண் திறந்துப் பார்த்தார். மதுரகவிகளும் இவர்க்கு உயிர் இருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டு, இவரால் பேச முடியுமா என்று பரிசோதிக்க-

செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்? என்று கேட்டார்

அதற்கு நம்மாழ்வார், அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்றார்.

பதிலின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்ட மதுரகவிகள், நம்மாழ்வாரின் மேதாவிலாசத்தை புரிந்துக்கொண்டு அவரின் சீடரானார்.

இந்த வினா விடையில் இரு தத்துவம் புதைந்துள்ளது.

  1.  செத்ததின், அதாவது உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன் என்னும் சிறியது பிறந்தால், பாவ புண்ணியங்களின் பயன்களை நுகர்வதே அதற்கு வாழ்க்கையாக இருக்கும்.
  2.  தன்னை பற்றிய அறிவு, பரமாத்வான திருமாலை பற்றிய அறிவற்ற ஜீவனுக்கு, பரமாத்மாவை பற்றிய அறிவு ஏற்பட்டால், அதைக்கொண்டே பக்தி வளரும்.

மதுரகவியாழ்வார் தன்னுடையப் பாசுரங்களில் திருமாலைத் தெய்வமாகப் பாடாது, நம்மாழ்வாரை தெய்வமாகப் பாடினார்.இவரது பாசுரங்கள் ஆச்சார்ய  பக்திக்கு எடுத்துக்காட்டாகும்.

மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் பாசுரங்களை பட்டோலைப் படுத்தினார். நம்மாழ்வார் திருவைகுண்டத்திற்கு சென்ற பிறகு தங்கத்தால் ஆன நம்மாழ்வாரின் விக்ரகம் கிடைத்தது.அவ்விக்ரகத்தை எழுதருளப்பண்ணிகொண்டு மதுரகவியாழ்வார் பல ஊர்களுக்கு சென்று நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்ல முடிவுசெய்தார்.

“வேதம் தமிழ்செய்த பெருமாள் வந்தார்,திருவாய்மொழிப்பெருமாள் வந்தார்,திருநகரிப்பெருமாள் வந்தார், திருவழுதிவளநாடர் வந்தார், திருக்குருகூர்நகர்நம்பி வந்தார், காரிமாறர் வந்தார், சடகோபர் வந்தார், பராங்குசர் வந்தார்”  என்று நம்மாழ்வாரின் பலவிருதுகளைப் பாடிக்கொண்டே மதுரகவியாழ்வார் மதுரையுள் சென்றார்.

அங்கே இருந்த சங்ககாலப் புலவர்கள், நம்மாழ்வாரின் பாடல்களை சங்கப்பலகையில் ஏற்றாமல், விருதுகளைப் பாடக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். அக்காலத்தில், சங்க பலகையில் பாடலை எற்றுவர்.பலகை அப்பாடலை கிழே தள்ளிவிட்டால், புலவர்கள் அப்பாடலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

நம்மாழ்வார் எட்டு வரி, நான்கு வரி கொண்ட பாடல்கள் நிறையப் பாடியுள்ளார். அவற்றை விட்டு, இரெண்டே வரியுள்ள,

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
 என்னும் திருநாமம் திண்ணம் நாரணமே! (திருவாய்மொழி 10.5.1)

(கண்ணனின் திருவடிகளில் ஆசை உடையவர்கள், கண்ணின் திருநாமத்தை உச்சரித்துக்கொண்டே இருங்கள், அது கண்ணனையே காட்டும்.இது திண்ணம்)

என்ற பாடலை பலகையில் மதுரகவியாழ்வார் ஏற்றினார்.பலகை அப்பாடலைத் தள்ளாமல் ஏற்றுக்கொண்டது. நம்மாழ்வாரின் பெருமையை புரிந்துக்கொண்ட சங்ககாலப் புலவர்களும் தாம் செய்த தவற்றின் பரிகாரமாக நம்மாழ்வாரின் பெருமையை தாம் பாடலாக இயற்றினர்.

ஈயடுவதோ கருடற்கெதிரே இரவிர்கெதிர் மின்மினி ஆடுவதோ
 நாயாடுவதோ உறுமும்புலிமுன் நரி கேசரிமுன்நடையாடுவதோ
 பேயடுவதோ ஊர்வசிக்குமுன் பெருமானடிசேர் வகுளாபரணன்
 ஓராயிரமாமறையின் தமிழிற்ஒருசொற்பொறுமோ இவ்வுலகிற்கவியே

(இவ்வுலகில் உள்ள கவிகளே, பெரிய சிறகுகளை உடைய கருடன் முன் சிறிய ஈ ஆடுவதும், இரவின் முன் மின்மினி பூச்சிகள் ஆடுவதும், உறுமுகின்ற புலிமுன் நாய் ஆடுவதும், சிங்கத்தின் முன் நரி ஆடுவதும், அழகிற்சிறந்த ஊர்வசிமுன் பேயாடுவதும், வகுளமாலையத் தரிந்த நம்மாழ்வாரின் பாசுரங்கள் முன் தமிழில் உள்ள ஒரு சொல் சமமாகுமா! என்பது பொருள்)

இதில் வியப்பு என்ன வென்றால், அங்குக் கூடியிருந்த அனைத்து புலவர்களும் மேற்சொன்ன ஒரேப் பாடலை எழுதினர். இவ்வாறு மதுரகவியாழ்வார் மேலும் சிலகாலம் நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்லி அவரும் தம் பெரியவரான நம்மாழ்வாரின் திருவடியைச் சென்று சேர்த்தார்.

மதுரகவியாழ்வார் ஆச்சார்ய பக்தியின் பெருமையை எடுத்துச்சொல்ல அவதரித்தவர். அதாவது, ஆச்சார்ய பக்தியும், பெருமானிடத்தில் உள்ள பக்தியும் படிக்கட்டுகளாக் கருதினால், பெருமான் மீது கொண்ட பக்தி என்பது முதல் படியாகும், ஆச்சார்ய பக்தி இரண்டாவதுப் படியாகும். ஒருவேளை பெருமானிடத்தில் உள்ள பக்தி குறைந்து அப் படிக்கட்டில்  இருந்து தவறினால், சம்சாரம் என்னும் கடலில் விழுந்து விடுவோம். ஆச்சார்ய பக்தி என்னும் படியில் இருந்து தவறினால், அடுத்தப்படியான பெருமானின் மீது கொண்ட பக்தி காப்பாற்றி விடும்.

Leave a comment