திருமழிசையாழ்வார் வரலாறு

திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் 4-வது ஆழ்வார்.இவர் சென்னைக்கு அருகில் உள்ள திருமழிசை என்ற ஊரில் அவதரித்தவர்.

  • மாதம் – தை
  • நட்சத்திரம் – மகம்
  • திவ்விய ப்ரபந்தம் – நான்முகன் திருவந்தாதி, திருச்சந்தவிருத்தம்.
திருமழிசையாழ்வார்
திருமழிசையாழ்வார்

இவர் திருமாலின் சக்கராயுதத்தின் அம்சமாக அவதரித்தார்.

திருமழிசையில் பார்கவர் என்பவர் யாகம் புரிகையில் அவரது மனைவி கனகாங்கிக்கு தலை,கை,கால் உள்ளிட்ட உறுப்புகளின்றி ஓர் பிண்டமாக அவதரித்தார். இதனால் மனம் வருந்தி பெற்றோர், பிண்டத்தை ஒரு பிரம்புதூற்றின் அடியில் விட்டுச் சென்றனர். பின்னர் திருமகளின் அருளால், எல்லா அவயவங்கள் பெற்று ஒரு குழந்தையானார்.பின்னர், திருவாளன் என்பவன் பிரம்பு அறுக்க போனவிடத்தில் குழந்தை அழுகுரலைக் கேட்டு, அதை எடுத்துக்கொண்டு வந்து தமது மனைவி, பங்கயச்செல்வியுடன் சேர்ந்து வளர்த்தார்.அக்குழந்தைக்கு, பசி, துக்கமின்றி இருந்தும் உடல் சிறிதும் தளரவில்லை.

இந்த ஆச்சர்யத்தை கேள்வியுற்று அருகில் இருந்த சிற்றூரில் இருந்து வந்த வயதான தம்பதியர் பால் கொடுத்தனர்.அவர்களின் அன்பின் மிகுதியால் குழந்தை பால் குடிக்கத் தொடங்கியது.சிறிதுகாலம் கழித்து, தனக்கு பால் கொடுத்த தம்பதியருக்கு கைம்மாறு பொருட்டு, தனக்கு கொடுத்தப் பாலில் மீதியை உண்ணுமாறு செய்தார்.அவ்வாறு உண்டபின் அவர்களுக்கு இளமை திரும்பியது.அவர்களுக்கு கணிகண்ணன் என்ற குழந்தை பிறந்தது.கணிகண்ணன் பின்னர் திருமழிசையாழ்வார் சீடரானார்.

இவர் சமணம், சாக்கியம், சைவம் முதலிய மதங்களை கற்று பின்னர் வைணவத்திற்கு வந்தார். இதை,இவரே பாடினார்-

சாக்கியம் கற்றோம், சமணம் கற்றோம், சங்கரனார் ஆக்கிய ஆகமநூல்
ஆராய்ந்தோம்; பாக்கியத்தால் வெங்கட்கரியனை சேர்ந்தோம்

இவர் சிவவாக்கியர் என்ற பெயரில் சைவத்தை முதலில் பின்பற்றி பின்னர் வைணவம் தழுவினார் என்ற வரலாறும் உண்டு.

திருமழிசையாழ்வாரும் சொன்னவண்ணம் செய்த பெருமாளும்

தமது சீடர் கணிகண்ணனுடன் சேர்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள திருவெக்காவில் உள்ள திருமாலுக்கு தொண்டு செய்துவந்தார்.அவர்கள் குடிலை சுத்தம் செய்து வரும் வயதான கிழவிக்கு தன யோகப்பலதாலே அனுக்ரக்ஹிக்க விரும்பினார்.கிழவிக்கு என்ன வரம் வேண்டும்மென கேட்க, அவளும் தன் வயது முதிர்வினால் ஏற்பட்ட இயலாமையை நீக்குமாறு கேட்க, ஆழ்வார் எப்போதும் இளமையாக இருக்கும்படி வரம் கொடுத்தார்.பல காலம் சென்றாலும் இளமைக்குன்றாத அப்பெண்ணின் அழகில் மயங்கிய காஞ்சியை ஆண்ட பல்லவராயன் அவளைத் திருமணம் செய்துகொண்டான்.பலகாலம் சென்றாலும் தன் மனைவியின் மாறாததை கண்டு வியப்புற்ற அரசன் மனைவியிடம் வினவினான்.அவள் ஆழ்வாரின் பெருமையை எடுத்துச் சொல்ல தனக்கும் இளமை கிடைக்க வேண்டும் என்று கணிகண்ணனிடம் சொல்ல ஆழ்வார் அவ்வாறு செய்ய மாட்டார் என்று பதிலளிக்க, குறைந்தபட்சம் தன்னைப் பற்றி கவிதை பாடுமாறு சொல்ல, ‘அவர் நாராயணனையன்றி எந்த நரனையும் பாடேன்‘ என்று சொல்ல, இதைக் கேட்டு, கோபமுற்ற அரசன், கணிகண்ணை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.இதைக் கேள்வியுற்ற ஆழ்வார், தானும் நாட்டை விட்டு செல்வதாக முடிவுசெய்து, யதொக்தகாரி பெருமானிடம்-

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்

என்று பாடினார்.
(கணிகண்ணைன் செல்கின்றான், நானும் செல்கிறேன், கச்சியில் இருக்கும் பெருமானே, நீயும் இங்கு இருக்காவேண்டாம்.நீ அதிசேஷனாகிய உன்னுடைய பாயைச் சுருட்டிக்கொண்டு எங்களுடன் கிளம்பி வா என்று விண்ணப்பித்தார்.)

பெருமானும் அவ்வாறு சென்றார்.அவர்கள் ஒருநாள் இரவு தங்கியிருந்த இடம் “ஓர் இரவு இருக்கை” என்று அழைக்கப்பட்டு, அப்பெயர் மருவி “ஓரிக்கை” என்று இப்போது வழங்கப்படுகிறது. இவ்விஷயத்தை கேள்வியுற்ற அரசன், தான் செய்த தவறை மன்னிக்குமாறு வேண்டி, நாடு திரும்ப வேண்டிக்கொண்டார்.திருமழிசையாழ்வாரும் திருமாலை நோக்கி-

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.

(கணிகண்ணைன் திரும்புகிறான், நானும் திரும்புகிறான், கச்சியிப் பெருமானே, நீயும் அதிசேஷனாகிய உன்னுடைய பாயைச் விரித்து படுத்துக்கொள்ள எங்களுடன் கிளம்பி வா என்று விண்ணப்பித்தார்.)

என்று வேண்ட திருமாலும் திரும்பினார்.ஆழ்வார் சொன்னபடி செய்தமையால், பெருமானுக்கு “சொன்னவண்ணம் செய்த பெருமான்” என்ற பெயர் பெற்றார்.

திருக்குடந்தையில் திருமழிசையாழ்வார்

கும்பகோணம் சென்று ஆராவமுதனை தரிசிக்கச் சென்றார்.பெரும்புலியூர் என்னும் கிராமத்தில் ஒரு வீட்டின் திண்ணையில் சென்று அமர்தார்.அங்கு வேதம் ஓதிக்கொண்டிருந்த சில பிராமணர்கள், ஆழ்வார் வேதத்தை கேட்க தகுதியற்றவர் என்று கருதி ஓதுவதை நிறுத்தினர்.இதைப் புரிந்துக்கொண்ட ஆழ்வார் அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.அதன்பின்,பிராமணர்கள் தாங்கள் விட்டவிடத்தை மறந்தனர்.ஆழ்வார் ஒரு கருப்பு நெல்லைக் நகத்தால் கீறி வேத வாக்கியத்தை குறிப்பாலே உணர்த்தினார்.”கிருஷ்ணனாம் வ்ரீஹிணாம்நகநிர்பிந்நம்
என்ற ஞாபகம் வர, ஆழ்வாரிடத்தில் மன்னிப்பு வேண்டினர்.

ஆழ்வாரின் பெருமையறிந்த சிலர், அவரை அங்கு நடந்த யாகசாலைக்கு அழைத்துசென்று மரியாதை செய்தனர்.யாகசாலையில் இருந்த சிலர், இவர் வருங்கயைப் பொறுக்கவில்லை. இதனால் கோபமுற்ற ஆழ்வார் தன்னுள் அந்தர்யாமியாய் இருக்கும் கண்ணனை இவர்களுக்கு காட்டுமாறு பாடினார்-

அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவது என்கொலோ
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்கவல்லையேல்
சக்கரம் கோல்கையனே சதங்கர் வாய் அடங்கிட
உட் கிடந்தவண்ணமே புறம் பொசிந்து காட்டிடே

(இவர்கள் அறியாமையை போக்குவதற்கு பயன்படாமல் இருக்கும் உன் கைககள் எதற்கு.சக்கரத்தை ஆயுதமாக கொண்ட திருமாலே, நீ கிடக்கும் கோலத்தை என்னுளே தோன்றி உன்னை இவர்களுக்கு காட்டு)

பெருமானும் இவருள்ளே தோன்றி அவர்களுக்கு தன்னைக் காட்டினார்.

ஆராவமுதனை சென்று சேவித்த அவர், பக்தியால் பாடினார்-

நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்கு ஞால மேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ விலங்கு மால் வரைக்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்கரை குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே (திருச்சந்த விருத்தம்-61)
குடந்தை ஆராவமுதன்
குடந்தை ஆராவமுதன்

இப்பாடலில் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு எனப் பாடியபோது, ஆராவமுதன் தன் சயன கோலத்தை விட்டு எழுந்திருக்க, பதறிய ஆழ்வார், “வாழி கேசனே” என்று பாடினார்.அவர் சொன்னதை தட்டாமல், பெருமான் அப்படியே இருந்தார்.இக்கோலத்தை இன்றும் இக்கோயிலில் சேவிக்கலாம்.

பிறப் பெயர்கள்

  • பக்திசாரர்
  • உறையில் இடாதவர் – வாளினை உறையில் இடாத வீரன் எனும் பொருள்பட (இங்கு ஆழ்வாரின் நா வாள் எனப்படுகிறது)
  • திருமழிசைபிரான்

இவர் நிறைய திவ்யபிரபந்தங்கள் எழுதிக் காவிரியில் விட்டார். அவற்றுள் நான்முகன் திருவந்தாதியும், திருச்சந்தவிருத்தமும் திரும்ப வந்தது.இவரது காலம் 7ஆம் நூற்றாண்டு.திருமழிசையாழ்வார் தன் யோகபலத்தால் 2300 வருடங்கள் இவ்வுலகில் வாழ்ந்தார்.

முதலாழ்வார்கள் வரலாறு

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார்
பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்தில் உள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலில்(திருவெக்கா)உள்ள பொய்கையில்(குளம்)அவதரித்தார்.

  • மாதம் – ஐப்பசி
  • நட்சத்திரம் – திருவோணம்
  • திவ்விய ப்ரபந்தம் – முதல் திருவந்தாதி

இவர் திருமாலின் ஆயுதமாகிய பாஞ்சச்சன்னியத்தின் அம்சமாக தோன்றினார். இவர் காலம் 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள.

பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார்
பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப் பெருமாள் கோயில் அருகில் அவதரித்தார்.

  • மாதம் – ஐப்பசி
  • நட்சத்திரம் – அவிட்டம்
  • திவ்விய ப்ரபந்தம் – இரண்டாம் திருவந்தாதி

இவர் திருமாலின் ஆயுதமாகிய கொளமேதகியின்(கதை)அம்சமாக தோன்றினார். இவர் காலம் 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

பேயாழ்வார்

பூதத்தாழ்வார்
பேயாழ்வார்

பேயாழ்வார் சென்னையையில் உள்ள திருமயிலையில்(மயிலாப்பூர்) அவதரித்தார்.

  • மாதம் – ஐப்பசி
  • நட்சத்திரம் – சதயம்
  • திவ்விய ப்ரபந்தம் – மூன்றாம் திருவந்தாதி

இவர் திருமாலின் ஆயுதமாகிய நாந்தகம்(வாள்)அம்சமாக தோன்றினார். இவர் காலம் 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் சம காலத்தவர்கள்.இவர்கள் மூவரும் முதலாழ்வார்கள் ஆவர்.

முன்னொரு காலத்தில் ஒருநாள் பலத்த மழை பெய்ய, பொய்கையாழ்வார் ஒரு குடிசையில் உள்ள இடைகழியில் மழைக்காக ஒதுங்கினார்.அவ்விடத்தில், ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம். சிறிது நேரம் கழித்தது, பூதத்தாழ்வார் நுழைந்தார். பின்னர், பேயாழ்வாரும் அங்கு நுழைந்தார்.சிறிது நேரம் கழித்து, அவர்கள் மூவரையும், நான்காவதாக ஒருவர் நெருக்குவதுப் போல் இருந்தது.

நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், அவர்கள் பாசுரங்கள் மூலம் விளக்கேற்றினர்.பொய்கையார்,

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சுட்டினேன் சொல் மாலை
இடராழி நிங்குகவே என்று (முதல் திருவந்தாதி -1)

(கடலினால் சூழ்ந்த இவ்வுலகை அகழியாக கொண்டு, கடலை நெய்யாகக் கொண்டு,கதிரவனை திரியாகக் கொண்டு விளக்கை ஏற்றி திருமாலின் திருவடிக்கு பாசுரங்களை மாலையாகச் சூட்டினேன்.)

அடுத்து பூதத்தாழ்வார்-

அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானச் தமிழ் புரிந்த நான்  (இரண்டாம் திருவந்தாதி -1)

(அன்பை அகழியாகக் கொண்டு, ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு, அறிவை திரியாகக் கொண்டு திருமாலுக்கு விளக்கேற்றினேன்)

பேயாழ்வார்-

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று (மூன்றாம் திருவந்தத்தி -1)

என்றுப் பாடினார்.

(இவர்கள் ஏற்றிய விளக்கில், மூன்றாவது ஆழ்வார் பரம்பொருளாகிய திருமாலை கண்டனர்).

நெருக்கத்தின் காரணம், திருமாலே என்று உணர்தனர். முதலாழ்வார்கள் மூவரும் திருமாலின் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் நிலையில் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தனர்.

ஆழ்வார்கள் – ஓர் அறிமுகம்

ஆழ்வார் என்பதற்கு பகவத் பக்தியில் ஆழ்ந்து இருப்பவர் என்று பொருள். அவர்கள் தென்னாட்டில் வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு இடங்களில் அவதரித்தவர்கள்.ஆழ்வார்கள் பன்னிருவர்-

  1. பொய்கையாழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்
  4. திருமழிசையாழ்வார்
  5. மதுரகவியாழ்வார்
  6. நம்மாழ்வார்
  7. குலசேகராழ்வார்
  8. பெரியாழ்வார்
  9. ஆண்டாள்
  10. தொண்டரடிப்பொடியாழ்வார்
  11. திருப்பாணாழ்வார்
  12. திருமங்கையாழ்வார்

ஆழ்வார்கள்

இவர்களில் மதுரகவியாழ்வார், ஆண்டாளைத் தவிர்த்து ஆழ்வார்கள் பதின்மர் என்று கூறும் வழக்கமும் உண்டு.இவர்கள் அனைவரையும் “சொன்னதைச் சொல்லும் ஏக கண்டர்கள்” என்பர்.அதாவது, இவர்கள் வெவ்வேறு உடல் கொண்டவர்கள் ஆனாலும் ஒரே குரலில், திருமாலே முழுமுதற்கடவுள் என்பதை சொல்வதற்காக அவதரித்தவர்கள்.இவர்கள் அருளிய பாசுரங்களை நாலாயிர திவ்ய ப்ரபந்தம் அல்லது அருளிச்செயல் என்பதாகும். அருளிச்செயல் வடமொழி வேதத்திற்கு இணையாகக் கருதப்படுகிறது. அருளிச்செயலின் பெருமை பற்றிக் கூறும் போது சுவாமி தேசிகன் “தெளியாத மறை நிலங்கள் ஓதித் தெளிகின்றோமே” என்கின்றார். அதாவது, புரிந்துக்கொள்வதற்கு கடினமான நான்கு வேதங்களை திவ்யப்பிரபந்தம் கொண்டு தெரிந்துக்கொள்கிறோம் என்கிறார்.

இவர்களால் பாடப்பெற்ற தலங்களே திவ்யதேசங்கள் ஆகும்.அவை 108.

இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் விரிவாக அடுத்தடுத்தக்  கட்டுரைகளில் பார்க்கலாம்.