பகீரத பிரயர்த்தனம்

நாம் நம்மால் செய்வதற்கு அரிய காரியம் என்றால் அதை “பகீரத பிரயர்த்தனம்” பண்ணி செய்ய வேண்டும் என்போம். பகீரத பிரயர்த்தனம் என்றால் என்ன?அதற்கு என்ன பொருள் என்று பார்போம்.

“பகீரதன்” என்னும் அரசன் சூரிய குலத்தைச் சார்ந்தவன். தசரதனுக்கு முப்பாட்டன். கோசல நாட்டிற்கு அரசன். பகீரதனுக்கும் முன்னர் சாகரன் என்னும் அரசன் கோசல நாட்டை ஆண்டு வந்தவன். சாகரன் தனக்கு வெற்றிகிட்ட வேண்டும் என்பதற்காக அசுவமேத யாகம் செய்ய தொடங்கினான். யாகத்திற்கு பயன்படும் ஒரு வெள்ளை குதிரையை அரசன் தொலைத்துவிட்டான். அதை தேடுவதற்காக தன்னுடைய 60,000 பிள்ளைகளை நான்கு திசைகளிலும் அனுப்பினான்.

432px-Ganga_Mahabalipuram
பகீரதன் தவம் செய்யும் சிற்பம் – மால்லபுரம்

அக்குதிரை கபில முனிவர் அருகில் கட்டபட்டு இருந்ததை கோபமுற்ற இளவரசன், கபில முனிவர் தான் குதிரையை திருடிக்கொண்டுவந்தார் என்று தவறாக புரிந்துக்கொண்டு, அவரை தாக்கினான். இதனால் சினம் கொண்ட கபில முனி இளவரசர்களை சாம்பலாக போகுமாறு சபித்துவிட்டார்.

பிள்ளைகள் திரும்பிவராததால் அவர்களை கண்டுபிடிக்குமாறு தன் பேரன் அனுஷ்மனுக்கு சாகரன் உத்தரவிட்டார். இளவரசர்கள் சாம்பலான விஷயத்தை கேள்விப்பட்ட அனுஷ்மன், அவர்களை எப்படி மீட்க வேண்டும் என்று கபிலரிடம் பிரார்த்திக்க, அவர் சுவர்க்க லோகத்தில் உள்ள, கங்கை நதி இவர்கள் மேல் பட்டால் அவர்களுக்கு மோக்ஷம் உண்டு என்றார்.

சகாரனுக்கு பின்னால் வந்த சுமன், திலீபன் போன்ற அரசர்களால் கங்கை பூமிக்கு கொண்டு வர முடியவில்லை. இதனால் நாட்டில் அமைதி குறைந்துக் கொண்டே வந்தது. இக்காலத்தில் தான் பகீரதன் அரியணை ஏறினான். கங்கையை பூமிக்கு கொண்டுவராமல் வேறு எதுவும் செய்ய முடியாது என்றுப் புரிந்துகொண்ட பகீரதன், அரசை அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு, இமயமலைக்குச் சென்று தவம் செய்யத் தொடங்கினான்.

பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்தப் பின்னர், பிரம்மா அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். பகீரதன் கங்கை பூமியில் பாய வேண்டும் என்று கேட்டான். பிரம்மாவும் அவ்வரத்தை அருளினார்.

பூமியில் பாவம் செய்த பலர் வசிப்பதால், அவர்கள் சம்பந்தம் பெற்றால், அவர்களின் பாவம் தனக்கும் வந்துவிடும் என்று கங்கை பயந்தாள். அதற்கு பகீரதன் பூமியில் புண்ணியம் செய்தவர்கள் அதிகம் உண்டு. அவர்கள் சம்பந்தம் பெற்றால் கங்கையின் பாவம் போகும் என்றான். இதனால், தான் பூமிக்கு வருவதற்கு கங்கை ஒப்புக்கொண்டாள்.

பூமியில் பாவம் செய்தவர்கள் அதிகமாக உள்ளதால், கங்கை பாயும் வேகத்தை எதிர்கொள்ள முடியவில்லை. பூமிக்கு எதுவும் ஆபத்து வராமல் காக்க வேண்டும் என்று பகீரதன் பரமசிவனிடம் வேண்டினான். சிவன் கங்கையை தன தலையில் பட்டு சென்றால் ஆபத்து வராது என்றார். கங்கையும் அவ்வாறே சென்றாள். ஆனாலும் கங்கையின் வேகம் குறையவில்லை. கங்கை பாய்ந்த வேகத்தில் ஜுனு என்ற முனிவரின் ஆஸ்ரமத்தை அடித்துத் சென்றது. இதனால் கோபம் கொண்ட முனிவர், கங்கை முழுவதையும் அபோசனத்திற்காக (அபோசனம் என்பது இலையில் சாதத்தையும் நெய்யையும் சேர்த்த பின்னர் சேர்த்து கொள்ளும் நீர்) எடுத்துக் கொண்டார்.

பகீரதன் முனிவரிடம் வேண்ட, அவரும் கங்கையை விட்டார். இதனால் கங்கைக்கு ஜாஹன்வி என்ற பெயர் ஏற்பட்டது.

பகீரதன் தன தேரில் முன்னால் சென்று சாகரனின் 60,000 பிள்ளைகளின் சாம்பல் இருக்கும் இடத்தை வழி காட்ட அவ்விடத்தில் கங்கை பாய்ந்து மோக்ஷம் அளித்தாள். இவ்வாறு பலதிசைகளில் பாய்த்து கடைசியாக கடலில் கலந்தாள்.

பகீரதனும் பின்னர் நாடு திரும்பி நாட்டை பரிபாலனம் செய்தான். பகீரதன் பல சோதனைகைளை கடந்து கங்கையை பூமிக்கு கொண்டுவந்ததால் இதை பகீரத பிரயர்த்தனம் என்கிறோம்.