ரோஹிணியா திருவோணமா ?

periyazhwar

 

பெரியாழ்வார் மற்றைய ஆழ்வார்களைக் காட்டிலும் கண்ணன் மீது பிரேமை கொண்டிருப்பவர். அதற்கு எடுத்துக்காட்டான “பல்லாண்டு பல்லாண்டு ” பதிகம் மிகவும் பிரபலமானது. அப்பாசுரத்தில், இப் பூவலகத்தில் தோன்றியதால், பெருமாளுக்கு எதுவும் குறை ஏற்படாமல் இருக்க பல்லாண்டு பாடினார்.

அதேபோல், வேறொரு பாசுரத்தில் அவனுக்கு பகைவர்களால் குறை ஏற்படாமல் இருக்க, கண்ணன் அவதரித்த நட்சத்திரத்தை மறைத்து பாடுகிறார்.

மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே முகிழ்நகையீர் வந்துகாணீரே

கண்ணன் ஆவணி மாத ரோஹிணி நட்சத்திரத்தில் அவதரித்தான். அதேபோல் பெருமானின் பொதுவான நட்சத்திரம் திருவோணம் என்பதும் உண்டு.இதில் அச்சுதனான கண்ணனின் வடிவழகை வர்ணிக்கும் போது “அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றியவன்” என்கிறார்.

ஹஸ்தத்தில் தொடங்கி அடுத்த பத்து நட்சத்திரங்கள் திருவோணமாகும். ஹஸ்தத்தில் இருந்து பின்னோக்கி பத்து நட்சத்திரங்கள் ரோஹிணி ஆகும். கலியுகத்தில் அவதரித்த பெரியாழ்வார், அவருக்கு பல்லாயிரம் ஆண்டுகள்முன் அவதரித்த கண்ணனின் நட்சத்திரத்தை வெளிப்படையாக சொன்னால் பகைவர்களால் ஏதேனும் கண்ணனுக்கு குறை ஏற்படுமோ என்று மறைத்து பாடுகிறார்.

இப்படி கண்ணன் மீதுள்ள பரிவாலே இருப்பதால் இவருக்கு பெரியாழ்வார் என்னும் பெயர்.